ஐபிஎல் 12வது லீக் போட்டி: மும்பை அபார வெற்றி; அஷ்வனி குமார் ரியான் அசத்தல்

3 days ago 4

மும்பை: ஐபிஎல் 12வது லீக் போட்டியில் நேற்று, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபாரமாக வென்றது. ஐபிஎல் 18வது தொடரின் 12வது லீக் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை, பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தாவின் துவக்க வீரர்கள் குவின்டன் டிகாக், சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் பந்தை எதிர்கொண்ட சுனில் நரைன், ரன் எடுக்காமல் கிளீன் போல்டாகி அதிர்ச்சி தந்தார்.

அதனால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கும் முன், அடுத்த ஓவரை வீசிய தீபக் சஹர், டிகாக்கை (1 ரன்) வீழ்த்தி கரகோஷம் பெற்றார். பின் வந்த கேப்டன் அஜிங்கிய ரகானே (11 ரன்), 4வது ஓவரின் துவக்கத்தில், அஷ்வனி குமார் பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 6வது ஓவரை வீசிய தீபக் சஹர் வீசிய அற்புதமான பந்தை வெங்கடேஷ் ஐயர் (3 ரன்) லேசாக தட்டி விட, விக்கெட் கீப்பர் ரிக்கெல்டன் பாய்ந்து பிடித்து கேட்ச் ஆக்கினார். பவர்பிளேவின் 6 ஓவர்கள் முடிவதற்குள், 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி பரிதவித்தது. அதன் பின்னும் துரதிருஷ்டம் துரத்தியதால், ஹர்திக் பாண்ட்யா வீசிய 7வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அங்க்ரீஷ் ரகுவன்ஷி (26 ரன்), நமன் திர்ரிடம் கேட்ச் தந்து 5வது விக்கெட்டாக அவுட்டானார்.

அதையடுத்து, ரகுவன்ஷிக்கு பதில் இம்பாக்ட் மாற்று வீரராக மணீஷ் பாண்டே களமிறங்கி, ரிங்கு சிங்குடன் இணை சேர்ந்து ஆடினார். அஷ்வனி குமாிடம் ரிங்கு சிங் (17) அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, 13வது ஓவரை வீசிய அஷ்வனி குமார் பந்தில் மணீஷ் பாண்டே (19 ரன்) கிளீன் போல்டாகி நடையை கட்டினார். பின் வந்த ஆண்ட்ரே ரஸ்ஸலும் (5) அஷ்வனியின் மந்திரப் பந்துக்கு இரையானார். அதனால், 13வது ஓவர் முடிவதற்குள், கொல்கத்தா அணி, 8 விக்கெட் இழப்புக்கு 88 ரன் மட்டுமே எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. சிறிது நேர இடைவெளியில் விக்னேஷ் புத்துார் வீசிய அற்புதமான பந்தை எதிர்கொண்ட ஹர்ஷித் ராணா (4 ரன்), நமன் திர்ரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். 14.4 ஓவரில், கொல்கத்தா அணி, 9 விக்கெட் இழப்புக்கு 100 ரன்னை எட்டியது. 17வது ஓவரை வீசிய மிட்செல் சான்ட்னர், ரமண்தீப் சிங்கை (22 ரன்) கடைசி விக்கெட்டாக அவுட்டாக்கினார். அதனால், 16.2 ஓவரில் 116 ரன்னுக்குள் கொல்கத்தாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மும்பை தரப்பில், அஷ்வனி குமார் 24 ரன் தந்து 4 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சஹர் 2, டிரென்ட் போல்ட், பாண்ட்யா, விக்னேஷ், சான்ட்னர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதையடுத்து, 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை களமிறங்கியது. 2வதாக களமிறங்கிய மும்பை அணி, 12.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 62 ரன்(41 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்ஸ்), சூர்ய குமார் 27 ரன் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ரஸ்சல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

The post ஐபிஎல் 12வது லீக் போட்டி: மும்பை அபார வெற்றி; அஷ்வனி குமார் ரியான் அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article