
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 224 ரன் எடுத்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 76 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 225 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 38 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா 74 ரன் எடுத்தார்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, அந்த சாதனைக்காக திட்டமிடவில்லை (20 ஓவர்களில் 22 டாட் பந்துகளை மட்டும் விளையாடுவது குறித்து). இதுவரை எப்படி விளையாடினோமோ அதே போல தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எங்களுடைய பேச்சாக இருந்தது. கருமண்ணில் உருவாக்கப்பட்ட இந்த பிட்ச்சில் சிக்ஸர்கள் அடிப்பது எளிதல்ல.
ஆனால் நான், சாய், பட்லர் ஆகியோர் ஸ்கோர் போர்ட்டை தொடர்ந்து நகர்த்த வேண்டும் என்று புரிந்துகொண்டு விளையாடினோம். எங்களில் ஒருவர் கடைசி வரை விளையாட வேண்டும் என்று எப்போதும் பேசியதில்லை. எங்களது அணிக்காக சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்கும் பசியுடன் நாங்கள் இருக்கிறோம். பீல்டிங் துறையில் முன்னேற வேண்டும் என்று ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பேசுகிறோம். இதுவரை அது சராசரியாகவே இருந்தது.
ஆனால் இன்று (நேற்று) அந்தத் துறையில் நாங்கள் அசத்தியதில் மகிழ்ச்சி. அனைவரும் அசத்தினர். இது போன்ற மைதானத்தில் உங்களுக்கு இலக்கைக் கட்டுப்படுத்த நிறைய பவுலர்கள் ஆப்ஷனாக இருப்பது நல்லது. அம்பயருடன் விவாதம் இருந்தது. உங்களின் 110 சதவீதம் செயல்பாடுகளை கொடுக்க விரும்பும் போது அது போன்ற உணர்வுகள் வருவது சகஜம். இவ்வாறு அவர் கூறினார்.