
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 31 ரன் எடுத்தார். குஜராத் தரப்பில் சிராஜ் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 61 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.
ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான் மற்றும் சாய் கிஷோர் ஆகிய 4 பேரும் களம் பிளேயிங் லெவனில் இடம் பெற்றனர்.
இதில் சாய் கிஷோர் (4 ஓவரில் 2 விக்கெட்), வாஷிங்டன் சுந்தர் (29 பந்தில் 49 ரன்) ஆகியோர் குஜராத் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஷாரூக் கானுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட் ஆனார். ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெற்றது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.