மும்பை: ஐதராபாத்தில் சீனாவின் ‘பிஒய்டி’ கார் தொழிற்சாலை வருவதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் டெஸ்லாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ‘பிஒய்டி’-க்கு இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ‘இந்திய வர்த்தக கொள்கையானது நாட்டின் நலன்களை மையப்படுத்தி இருக்கும். அதன் அடிப்படையில் மட்டுமே இந்தியாவில் யாரை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். எப்படியிருந்தாலும், இப்போதைக்கு சீனாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ‘பிஒய்டி’ இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான அனுமதி இல்லை. பிஒய்டியின் மிகப்பெரிய போட்டியாளரான அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தி ஆலை தொடங்க உள்ளது.
அதற்கான முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சட்டங்களைப் பின்பற்றினால் மட்டுமே பிஒய்டியை பரிசீலிக்க முடியும். சீன நிறுவனங்கள் இந்தியாவில் நியாயமற்ற வணிக முறைகளைப் பின்பற்றுகின்றன’ என்றார். சீன கம்யூனிஸ்ட் அரசாங்கமும், சீன ராணுவமும் பல சீன நிறுவனங்களில் நேரடியாக உரிமையைக் கொண்டுள்ளன. மேலும், சீன நிறுவனங்கள் ஒருபோதும் சந்தை விதிகளுக்கு ஏற்ப செயல்படுவதில்லை. பலமுறை அசாதாரணமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி, மற்ற நாடுகளின் நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கின்றன. இவை நியாயமற்ற வணிக முறைகளாகும். இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் வணிகம் செய்யும் பல சீன கார் நிறுவனங்கள் விதிக்கும் குறைந்த விலைகள் அறிவிப்பால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கின்றன.
சமீபத்தில், பிஒய்டி நிறுவனம் ஐதராபாத்தில் 1000 கோடி டாலர் செலவில் உற்பத்தி ஆலையைத் தொடங்குவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த சூழலில் பியூஷ் கோயலின் விளக்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது. பியூஷ் கோயலின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஆலை தொடங்குவது குறித்து தற்போது திட்டமிடவில்லை என்று பிஒய்டி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக பிஒய்டி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இந்தியாவில் சொந்தமாக ஆலை தொடங்குவதற்கு பிஒய்டிக்கு இதுவரை முடியவில்லை. இதற்கு ஒன்றிய அரசின் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் மேகா இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து 2023ம் ஆண்டு 100 கோடி டாலர் செலவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க பிஒய்டி திட்டமிட்டிருந்தது. ஆனால், இதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஐதராபாத்தில் சீனாவின் கார் தொழிற்சாலை; டெஸ்லாவுக்கு அனுமதி ‘பிஒய்டி’-க்கு இல்லை: டெஸ்லாவுக்கு அனுமதி ‘பிஒய்டி’-க்கு இல்லை appeared first on Dinakaran.