
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷமி தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகினார்.
அதன்பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்த ஷமி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடினார். தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில், முகமது ஷமியிடம் ரூ. 1 கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முகமது ஷமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முகமது ஷமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.