ஐடிஐக்களில் மாணவிகள் சேர்க்கை 95 சதவீதத்தை தாண்டியுள்ளது: அதிகாரிகள் தகவல்

2 hours ago 2

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐ.டி.ஐ.க்களில் மாணவிகள் சேர்க்கை 95 சதவிதத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் ஐடிஐ எனப்படும் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு கால வரம்பு 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமும் ஐடிஐக்களில் மாணவிகளின் சேர்க்கை 95 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: 56 பொறியியல் துறைகளில் ஐடிஐக்கள் நீண்டகால திறன் பயிற்சிகளை அளிக்கின்றன. வெல்டர், பிட்டர் மற்றும் டர்னர் போன்ற வழக்கமான படிப்புகளைத் தவிர, தளவாட உதவியாளர், கட்டிடக்கலை உதவியாளர், மருத்துவ மின்னணுவியல், ஆபரேட்டர் மேம்பட்ட எந்திரக் கருவிகள் மற்றும் தொழில் துறை பாதுகாப்பு மேலாண்மை போன்ற புதிய வர்த்தக ரீதியான படிப்புகளும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 10 சிறப்பு அரசு ஐடிஐகள் மற்றும் 4 மகளிர் பிரிவுகள் மூலம் பெண்களுக்கு நீண்டகால திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, கிண்டி, அம்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள ஐடிஐ கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 4 பெண்கள் பிரிவுகள் உள்பட மாணவிகளுக்கென 14 ஐடிஐக்கள் உள்ளன. கடந்த 2023-24ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2,711 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 96 சதவீதம் பெண்கள் சேர்ந்துள்ளனர். 2024-25ம் ஆண்டில், இது 100 சதவீதத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐடிஐக்களில் மாணவிகள் சேர்க்கை 95 சதவீதத்தை தாண்டியுள்ளது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article