
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி குறைவான ஸ்ட்ரை ரேட்டில் விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ரோகித் சர்மா போல அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய அணியில் பின் வரிசையில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள் என்ற தன்னம்பிக்கையுடன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடும் முடிவை எடுத்தார். ஒருவேளை ரோகித் தவறு செய்தால் கூட அதை சரி செய்வதற்கு விராட் கோலி போன்றவர் இருக்கிறார்கள். ரோகித் சர்மா இந்திய அணியில் அதை புரிந்து செயல்படுகிறார்.
ஆனால் பெங்களூரு அணியில் அது போன்ற நிலைமை இருக்கிறதா?. இங்கே விராட் கோலி சீராக 700 - 800 ரன்கள் அடிக்க வேண்டுமா? அல்லது அதிரடியாக 400 ரன்கள் குவித்தால் போதுமா? என்பது கேள்வியாகும். ஏனென்றால் விராட் கோலி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும்போது தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பது குறையும். எனவே விராட் கோலியின் ஆட்டத்தில் பெரிய மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
வேண்டுமானால் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் மாற்றங்களை செய்யலாம். மற்றபடி 140 - 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விராட் கோலி விளையாடினால் எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் பெரும்பாலான தருணங்களில் விராட் கோலி நங்கூரமாக விளையாட வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்" என்று கூறினார்.