ஐ.பி.எல்.: புதிய விதி குறித்து அதிருப்தி தெரிவித்த கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி

4 hours ago 3

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 7 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன.

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் கடந்த 17-ம் தேதி மீண்டும் தொடங்கியது. அன்றைய தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருந்தன.

ஆனால் அந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற சூழலில் களமிறங்கிய கொல்கத்தா அணி இதன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

இதனிடையே தற்போது ஐ.பி.எல். நடைபெறும் சமயத்தில் இந்தியாவின் பல நகரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இனி வரும் ஆட்டங்களுக்கு மொத்தமாக 2 மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என புதிய விதிமுறையை ஐ.பி.எல். நிர்வாகம் 20-ம் தேதி அறிவித்தது. இதற்கு முன்னதாக மழையால் ஆட்டம் பாதிப்பு அல்லது தாமதம் ஆகும்போது கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இந்த விதிமுறைக்கு கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாகி வெங்கி மைசூர் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். மேலும் இது குறித்து அவர் ஐ.பி.எல். நிர்வாகத்திற்கு இ-மெயில் அனுப்பியுள்ளார்.

அதில், "ஐ.பி.எல். தொடரின் பாதியில் கொண்டுவரப்பட்ட விதி மாற்றங்கள் தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற மாற்றங்கள் அதிக நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்கிய போது பெங்களூருவில் நடக்க இருந்த பெங்களூரு-கொல்கத்தா இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட கணிசமாக வாய்ப்பு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. இந்த விதிமுறையை மீண்டும் போட்டி தொடங்கிய முதல் ஆட்டத்தில் இருந்தே அமல்படுத்தி இருந்தால், பெங்களூரு- கொல்கத்தா ஆட்டத்தை குறைந்தது 5 ஓவர்கள் கொண்டதாக நடத்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் கொல்கத்தா அணியின் பிளே-ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. போட்டியின் பாதியில் இதுபோன்ற தற்காலிக முடிவுகளும் அவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளும் இந்த நிலையிலான போட்டிக்கு பொருத்தமானவை அல்ல. நாங்கள் ஏன் வருத்தப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Read Entire Article