
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் 67 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 20 ஓவரில் 209 ரன் மட்டுமே எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பெங்களூரு தரப்பில் க்ருனால் பாண்ட்யா 4 விக்கெட், யாஷ் தயாள், ஹேசில்வுட் தலா 2 விக்கெட், புவனேஷ்வர் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பிராவோவின் மாபெரும் சாதனையை முறியடித்து புவனேஷ்வர் குமார் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் (184 *விக்கெட்) படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த பட்டியலில் பிராவோ (183 விக்கெட்) முதல் இடத்தில் இருந்தார். அவரது சாதனையை புவனேஷ்வர் குமார் முறியடித்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்;
புவனேஷ்வர் குமார் - 184 விக்கெட்
டுவைன் பிராவோ - 183 விக்கெட்
ஜஸ்ப்ரீத் பும்ரா - 165 விக்கெட்
உமேஷ் யாதவ் - 144 விக்கெட்