ஐ.பி.எல். தொடரில் போட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு - வெளியான தகவல்

2 weeks ago 4

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் அந்த சமயம் சர்வதேச போட்டிகள் இல்லாத வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சரிகட்டியுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 ஆண்டில் ஐ.பி.எல். ஆட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் கூறுகையில், 'ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு அணியும் முழுமையாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணையை விரிவுப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இத்தகைய பாணியில் ஆடும் போது, மொத்தம் 94 ஆட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும். அடுத்த டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்கும் காலக்கட்டமான 2028-ல் இருந்து அதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 94 ஆட்டங்கள் என்றால் போட்டிக்குரிய நாட்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டி இருக்கும். போட்டி அட்டவணைக்கு ஏற்ப காலக்கட்டத்தை உருவாக்க, இரு நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் விவாதிக்கிறோம். அதே சமயம் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாகத் தான் இருக்கிறது. தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டி வளர்ச்சி அடைந்து வருகிறது. ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article