ஐ.பி.எல். தொடரில் இவர்தான் சிறந்த பந்துவீச்சாளர் - சக அணி வீரரை புகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்

10 hours ago 1

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்-க்கு வழங்கப்பட்டது.

கடந்த இரு ஆட்டங்களிலும் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சு மிக முக்கியமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டங்களில் சோபிக்க தவறிய யுஸ்வேந்திர சாஹல் கடந்த இரு ஆட்டங்களில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது.

இந்நிலையில், பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் சாஹலுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன். நீங்கள் ஒரு மேட்ச் வின்னர். எங்களுக்கு முடிந்தவரை விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். நீங்கள் தற்காப்பு ஆட்டம் ஆட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் அணுகுமுறை தற்காப்பு ரீதியாக இருக்க வேண்டாம் என்று கூறினேன். அவர் நிச்சயமாக பார்முக்கு திரும்புவார் என நாங்கள் நம்பினோம். ஒரு லெக் ஸ்பின்னராக அவர் இதைத்தான் செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஐ.பி.எல் தொடரின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான். அதை நாம் எப்போதும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article