
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 51 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிபட்டியலில் மும்பை, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி வருகிறது. 10 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 8 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நடப்பு தொடரில் ஏற்கனவே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க சென்னை கடுமையாக போராடும். அதேவேளையில் வெற்றிப்பயணத்தை தொடர பெங்களூரு முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையடுத்து இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.