
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி 31 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். சென்னைக்கு எதிராக 34 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் அதில் 1,084 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னர் ஷிகர் தவான் சென்னைக்கு எதிராக 29 ஆட்டங்களில் விளையாடி 1,057 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள விராட் புதிய சாதனை படைத்துள்ளார்.