ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? - பெங்களூருவுடன் இன்று மோதல்

1 week ago 4

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவையும், 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையையும் வீழ்த்தியது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை அதன் சொந்த மண்ணில் அடக்கியது. அந்த ஆட்டத்தில் 221 ரன்கள் குவித்த பெங்களூரு அணி, 209 ரன்னில் மும்பையை கட்டுப்படுத்தி வெற்றி கண்டது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (2 அரைசதத்துடன் 164 ரன்கள்), கேப்டன் ரஜத் படிதார் (2 அரைசதத்துடன் 161 ரன்கள்), பில் சால்ட், தேவ்தத் படிக்கல், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

டெல்லி அணி தனது முதல் மூன்று ஆட்டங்களில் லக்னோ, ஐதராபாத், சென்னை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்து 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது.

நடப்பு சீசனில் தோல்வியை சந்திக்காக ஒரே அணியான டெல்லியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், பாப் டுபிளிஸ்சிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், முகேஷ் குமாரும் வலுசேர்க்கின்றனர். கேப்டன் அக்ஷர் பட்டேலின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இன்னும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.

தனது வெற்றிப்பயணத்தை தொடர டெல்லி அணியும், 4-வது வெற்றியை குறிவைத்து பெங்களூரு அணியும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

Read Entire Article