
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் மும்பையின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதில் அவர் 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 100+ சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி, கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் (பெங்களூரு மைதானம்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 100+ சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:
விராட் கோலி - சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 130 சிக்சர்கள்
கிறிஸ் கெயில் - சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 127 சிக்சர்கள்
டி வில்லியர்ஸ் - சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு - 118 சிக்சர்கள்
ரோகித் சர்மா - வான்கடே மைதானம், மும்பை - 102 சிக்சர்கள்