ஐ.பி.எல். கிரிக்கெட்: சரிவில் இருந்து மீளுமா சென்னை அணி? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்

1 week ago 1

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாக தொடங்கிய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. இதில் சொந்த ஊரில் அடைந்த 2 தோல்வியும் அடங்கும்.

முல்லாப்பூரில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 201 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை அணி இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான அணி கலவையை அடையாளம் காண முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. கடந்த 5 ஆட்டங்களில் 12 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். அது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பீல்டிங்கில் வெகுவாக முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருப்பதால் எஞ்சிய தொடருக்கு டோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கிறார்கள். இருந்தாலும் தொடக்கம் முதலே வலுவான ஷாட்கள் மூலம் ரன்கள் வேகத்தை அதிகரிக்கும் துடிப்பான பேட்ஸ்மேன்கள் இல்லை. மிடில் வரிசையும் பலவீனமாக தெரிகிறது. டோனி களத்தில் நின்றும் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை.

பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா, ஆர்.அஸ்வின் ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு (5 ஆட்டத்தில் 85 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள்) மெச்சும்படி இல்லை. இதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்த கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் போராடி தோற்றது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 239 ரன்கள் இலக்கை தூரத்திய கொல்கத்தா 234 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கி கோட்டை விட்டது.

கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, வெங்கடேஷ் அய்யர், ரகுவன்ஷி, ரிங்கு சிங் நல்ல பார்மில் உள்ளனர். விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ராஜஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற 4 ஆட்டங்களில் 20 ரன்னை கூட தொடவில்லை. இதே போல் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் போதிய பங்களிப்பு அளித்தால் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தங்களுக்குரிய நாளாக அமைந்தால் மிரட்டி விடுவார்கள்.

மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், 3-வது வெற்றியை குறி வைத்து கொல்கத்தாவும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

Read Entire Article