
முல்லாப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி முதலாவது ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தையும், 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவையும் தோற்கடித்தது. கடந்த ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்களில் அடங்கியது.
உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா சூப்பர் பார்மில் உள்ளனர். பிரப்சிம்ரன் சிங், மேக்ஸ்வெல், ஷசாங் சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், மார்கோ யான்சென் வலுசேர்க்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மூன்று ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்ற சென்னை அதன் பிறகு நடந்த ஆட்டங்களில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும், 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடமும், 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடமும் அடுத்தடுத்து தோற்றது. கடந்த 3 ஆட்டங்களிலும் 180-க்கு மேலான ரன்னை விரட்டிப்பிடிக்க முடியாமல் முடங்கியது.
சென்னை அணியில் பேட்டிங் கவலைக்குரியதாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. மிடில் வரிசையில் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபேவும் சொதப்புகிறார். விக்கெட் கீப்பரும், போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவருமான 43 வயது டோனியின் பேட்டிங் இந்த முறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வயது அதிகரிப்பால் அவரது பேட்டிங் வேகம் குறைந்து விட்டது. இதனால் அவர் கடைசி கட்டத்தில் களத்தில் நின்றாலே வெற்றி என்ற தனது தனித்துவமான அடையாளத்தை இழந்து வருகிறார்.
கடந்த இரு ஆட்டங்களில் அவர் களத்தில் இருந்தும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியாததால் டோனி ஓய்வு பெறுவதே மேலானது என்று ரசிகர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். டோனியின் ஆக்ரோஷமற்ற ஆட்டம் சென்னை அணியின் பேட்டிங் கலவையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற பேட்ஸ்மேன்கள் ஒருசேர கைகோர்த்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போதிய தாக்கம் தென்படவில்லை.
வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இருப்பினும் உள்ளூர் சூழலில் பஞ்சாப் அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன.
முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன. நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்ததால் 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.