புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலத்திற்கு மொத்தம் 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அந்த பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் தேவை, விருப்பம் அடிப்படையில் ஆயிரம் வீரர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 574 பேர் கொண்ட இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் 366 பேர் இந்தியர்கள், 208 வீரர்கள் வெளிநாட்டவர் ஆவர். இவர்களில் 241 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்கவைக்காததால் இவர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள்.
இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்ட் கிடைக்கவில்லை என்றால் டெல்லி அணியின் இலக்கு ஸ்ரேயாஸ் ஐயர்தான் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம். கார்டு மூலம் ரிஷப் பண்டை மீண்டும் இழுக்க முயற்சிப்பார்கள். அவர் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் இலக்கு ஸ்ரேயாஸ் ஐயராகதான் இருப்பார். ஏனெனில் டெல்லிக்கு இப்போது கேப்டன் தேவை. ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே கொல்கத்தா அணியை வழிநடத்தி வெற்றி தேடித்தந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.