
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 33 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், டெல்லி அணியிடம்) என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. வெளியூரில் நடந்த 4 ஆட்டங்களிலும்வெற்றி பெற்ற பெங்களூரு அணி சொந்த மண்ணில் (பெங்களூரு மைதானம்) நடந்த 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி உள்ளது.
பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 5-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடந்த ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக மோதிய இரண்டு ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.