
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ், குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
நடப்பு தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை தன்வசம் (அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கு அளிக்கப்படும் தொப்பி) வைத்துள்ளார். கடந்த சீசன்களில் மிக மோசமான செயல்பாட்டை வெளிபடுத்தி வந்த பிரசித் கிருஷ்ணா நடப்பு தொடரில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நடப்பு தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பவர்பிளேவில் 5 அல்லது 6வது ஓவரில் பந்துவீசுவது எனக்கு கொடுக்கப்பட்ட புதிய பொறுப்பு. ஆனால், இந்த பொறுப்பு எனக்கு புதிதாக தெரியவில்லை. ஏனெனில், ஒருநாள் கிரிக்கெட்டில் இதனை நான் செய்துள்ளேன்.
நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறவில்லையெனில் அது சிறப்பானதாக இருக்காது. கடந்த இரு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரை தவறவிட்டேன். அதன் பின் மீண்டும் ஐ.பி.எல். தொடரில் இணைந்த பின்னர் நன்றாக பந்துவீச வேண்டும் என தெளிவாக இருந்தேன். குஜராத் அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.
கில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். அவருக்கு அணியின் திட்டங்கள் என்னவென்று நன்றாக தெரிகிறது. அவர் வீரர்களுடன் தொடர்ந்து பேசுகிறார். அவர் ஒவ்வொரு நாளும் சிறப்பான கேப்டனாக மாறி வருகிறார். பயிற்சியாளர் நெஹ்ராவும் மிகவும் உதவிகரமாக உள்ளார். ஆடுகளத்தை கணிப்பது, பேட்ஸ்மேன்களின் மனநிலையை புரிந்து கொள்ள அவரது அறிவுரைகள் மிகவும் உதவிகரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.