
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடருக்காக தற்போது 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாகூரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்திருந்தார்.
இதனிடையே தற்போது லக்னோ அணியின் பயிற்சி முகாமில் இவர் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இதனால் இவரை லக்னோ அணி மாற்று வீரராக அணியில் சேர்க்க உள்ளதா? அல்லது வேறு எதாவது காரணமா? என்று கேள்விகள் எழ தொடங்கின.
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி, லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ், ஆவேஷ் கான் மற்றும் மோசின் கான் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் மூவருமே தேசிய கிரிக்கெட் அகாடமியின் தகுதி சான்று பெற்றால் மட்டுமே ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியும். ஒருவேளை அவர்களில் யாராவது ஒருவர் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாற்று வீரராக ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்க லக்னோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.