
மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் முதலாவதாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரின் முதல் பந்திலே அபிஷேக் சர்மா கொடுத்த கேட்சை பிடிக்க மும்பை அணியினர் தவறினர். அடுத்து கொடுத்த மற்றொரு கேட்சையும் மும்பை வீரர்கள் தவறவிட்டநிலையில் அதை பயன்படுத்தி அவர் அதிரடியாக ஆடத்தொடங்கினார்.
இந்நிலையில் சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 40 (28) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஒரளவு தாக்குப் பிடித்த டிராவிஸ் ஹெட் 28 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக நிதிஷ் குமார் ரெட்டியுடன், ஹென்ரி கிளாசன் ஜோடி சேர்ந்தார். ஒரளவு ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து அதிரடி காட்டி வந்த ஹென்ரி கிளாசன் 37 (28) ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் அதிரடி காட்டிய அன்கிட் வர்மா 18 (8) ரன்களும், பேட் கம்மின்ஸ் 8 (4) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரயான் ரிக்கெல்டன் - ரோகித் சர்மா ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 3 சிக்ஸர்களை விளாசிய ரோகித் சர்மா, 26 ரன்களில் கேட்ச் ஆனார்.
ரியான் ரிக்கெல்டன் 31 ரன்களும், வில் ஜாக்ஸ் 36 ரன்களும் சேர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் விளாசினார். நிதானமாக ஆடிய திலக் வர்மா 21 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
17-வது ஓவரின் முடிவில் மும்பை அணி வெற்றி பெற 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 18-வது ஓவரை வீசிய ஈஷான் மலிங்கா 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹர்திக் பாண்ட்யா மற்றும் நமன் திர் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதையடுத்து 19-வது ஓவரின் முதல் பந்தில், சீஷன் அன்சாரி வீசிய பந்தை திலக் வர்மா பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். இறுதியில் 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.