மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் நேற்று (அக்டோபர் 31) மாலைக்குள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் அணியில் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
இதில் ரசிகர்கள் எதிர்பார்த்த பெரும்பாலன வீரர்கள் அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ள வேளையில், அதிர்ச்சிகரமாக சில நட்சத்திர வீரர்கள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு அணியிலும் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர்கள் விவரம் பின்வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீசா பத்திரானா என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.
இருப்பினும் அந்த அணியிலிருந்து நட்சத்திர வீரர்களான தீபக் சாஹர், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிச்செல், கான்வே, கான்வே, சான்ட்னெர் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது.
ஆனால் நட்சத்திர வீரர்கள் பலர் அடங்கிய பெங்களூரு அணியிலிருந்து பாப் டு பிளெஸ்சிஸ், வில் ஜேக்ஸ், மேக்ஸ்வெல், சிராஜ், கேமரூன் கிரீன், பெர்குசன் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது ஆச்சரியமாக அமைந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரை தக்க வைத்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், குர்பாஸ், ஸ்டார்க் ஆகிய நட்சத்திர வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ்: சஷாங்க் சிங் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் ஆகிய இருவரை மட்டும் தக்கவைத்துள்ளது.
ஆனால் அந்த அணி ஆச்சரியமளிக்கும் வகையில் ஷிகர் தவான், அர்ஷ்தீப் சிங், ரபடா, பேர்ஸ்டோவ், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் சாம் கர்ரண் ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துள்ளது.
இருப்பினும் நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன், டிம் டேவிட், கோட்சே ஆகியோரை விடுவித்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ள நிலையில், அந்த அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், கடந்த சீசனில் அதிரடியில் கலக்கிய ஜேக் பிரெசர் மெக்கர்க், ஆண்ட்ரிச் நோர்ஜே, பிரித்வி ஷா மற்றும் வார்னர் ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: ஹென்ரிச் கிளாசென், கம்மின்ஸ், அபிஷேக் சர்மா , டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை தக்க வைத்துள்ளது.
இருப்பினும் அந்த அணியிலிருந்து புவனேஸ்வர் குமார், நடராஜன், கிளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்களை கழற்றி விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான், சுப்மன் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா , ஷாருக் கான் ஆகியோரை மட்டுமே வைத்துள்ளது. மில்லர், வில்லியம்சன் ஆகிய நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஷின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தக்க வைத்துள்ளது.
அந்த அணி கே.எல். ராகுல், டி காக், மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், ஹூடா, குருனால் பாண்ட்யா ஆகிய நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் சர்மா ஆகிய 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
டிரெண்ட் போல்ட், பட்லர், அஸ்வின், சாஹல், ஆவேஷ் கான், பர்கர் ஆகிய நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ளது.