
நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் பசுபதீஸ்வரர்- பிரசன்ன பார்வதி திருக்கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் 70-வது இந்து சமய மாநாடு, 65-வது சிவ அருள்நெறி திருக்கூட்ட ஆண்டு விழா கடந்த 3-ம் தேதி சனிக்கிழமை தொடங்கியது.
திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு தேவார பஜனையும், 6:30 மணிக்கு தீபாராதனையும், முற்பகல் 11.30 மணிக்கு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து அருள்மிகு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ராஜமேளம், பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம் முழங்க அருள்மிகு பசுபதீஸ்வரர் - பிரசன்ன பார்வதி வாகன பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் 8-ம் நாளான நேற்று சனிக்கிழமை 9 மணிக்கு தேவார திருவாசக பாட்டுப்போட்டி மற்றும் பக்தி பேச்சு போட்டி நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு சனி மஹா பிரதோஷம் மற்றும் சுவாமி வாகன பவனியும், மாலை 5 மணிக்கு சுவாமி பரிவேட்டையும், தொடர்ந்து இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் தேவார இன்னிசை குழுவினரின் பக்தி இன்னிசையும், இரவு 7 மணிக்கு சிவ தேவஸ்தான 65-வது சிவஅருள்நெறித் திருக்கூட்ட ஆண்டுவிழாவும், இரவு 8 மணிக்கு மாபெரும் நகைச்சுவை கலக்கல் இசை பட்டிமன்றமும் நடைபெற்றது.
திருவிழாவின் 9-வது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சண்டிகேஷ்வர பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் வாகனத்தில் திருக்கோயிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தேவார திருவாசக பஜனை மற்றும் பக்தி இன்னிசையும், இரவு 7:30 மணிக்கு சமுதாய தலைவர்கள் மாநாடும், கோலம் மற்றும் மின்விளக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதலும், இரவு 8 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவின் நிறைவு நாளான நாளை (திங்கள்கிழமை) நண்பகல் 12:00 மணிக்கு திருக்காவடி ஆட்டமும், பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் அன்னதானமும், மாலை 6 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடும் இரவு 8 மணிக்கு மாபெரும் திரைப்பட மெல்லிசை விருந்தும், நள்ளிரவு 12:30 மணிக்கு மாபெரும் வாண வேடிக்கையும் நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாகக் குழு தலைவர் சி. தனபாலன், செயலாளர் ஜி.ராஜகுமார், பொருளாளர் எஸ். பாரத்சிங் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிவ பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.