
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இந்த தொடருக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் அடுத்த மாதம் (மார்ச்) 21-ந்தேதி தொடங்கும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்திருந்தார். இருப்பினும் அட்டவணை உறுதி செய்யபடாமல் இருந்தது.
இந்நிலையில் மார்ச் 22-ம் தேதி ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளன. மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன.