
சென்னை,
தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்வதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும் நாளை (புதன் கிழமை) கடலோர தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி கடலோர தமிழகம், உள்தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.