மாஸ்கோ,
ரஷியாவின் வெளியுறவு துறை மந்திரி செர்ஜி லாவ்ரவ் ரஷிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க பிரதிநிதிகளை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அடிப்படையில் நீண்ட காலத்திற்கு உறுப்பினர்களாக இருக்க செய்ய வேண்டும். உலக அளவில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். இதனால், இந்தியாவுக்கான தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இவர்களுடன் இணைந்து கொண்டார். இந்தியாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
கடைசியாக, 2021-22-ம் ஆண்டில் நிரந்தரமில்லாத உறுப்பினராக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி வலியுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து ரஷியாவும் இந்தியாவுக்கான தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது.