
கொல்கத்தா,
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற 2-வது அரையிறுதியின் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்தது. மோகன் பகான் அணி சார்பில் ஜாசன் கம்மிங்ஸ், ரால்டே ஆகியோர் கோல் போட்டனர்.
இதன் முதலாவது சுற்றில் ஜாம்ஷெட்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. இரு ஆட்டங்களின் அடிப்படையில் மோகன் பகான் அணி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. வருகிற 12-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் மோகன் பகான் அணி, பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது.