பச்சிளம் பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்க முயன்ற நர்சிங் மாணவி: புதுக்கோட்டையில் பரபரப்பு

3 hours ago 2

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பனையப்பட்டியை சேர்ந்தவர் வினோதா (வயது 21). இவர் இலுப்பூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நா்சிங் படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் சிலம்பரசனும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வினோதா கர்ப்பமடைந்தார். அவருக்கு நேற்று வீட்டில் பெண் குழந்தை பிறந்தது. நர்சிங் மாணவி என்பதால் அவரே சுய பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பாக கருவுற்று குழந்தை பிறந்ததால், அந்த பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைக்க வினோதாவும், அவரது வீட்டில் இருந்தவர்களும் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அருகில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று அந்த பச்சிளம் பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்க முயன்றிருக்கின்றனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையில் அந்த பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைப்பதற்குள் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். மேலும் போலீசாரிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தனர். இதையடுத்து உடனடியாக அந்த பச்சிளம் பெண் குழந்தையை சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பிரசவித்த தாய் வினோதாவும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தாயும், சேயும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காதலன் சிலம்பரசனை போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் காதலன் சிலம்பரசன் தூண்டுதல் பேரில் அந்த பச்சிளம் பெண் குழந்தையை காதலி, மண்ணில் புதைத்து கொலை செய்ய முயன்றது தொியவந்தது. அதன்படி வழக்குப்பதிந்து சிலம்பரசனை கைது செய்து, விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article