
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'ஏஸ்'. இந்த படத்தினை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் திவ்யாபிள்ளை, பிருத்விராஜ் சுகுமாரன், யோகி பாபு, பி.எஸ்.அவினாஸ், ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய நடிகர் விஜய் சேதுபதி "ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனதே நிறைய பேருக்குத் தெரியல. அது எங்க தப்புதான்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது, "ஒரு சில நெருக்கடிகளால் படத்தை உடனடியாக வெளியிட வேண்டிய சூழல் வந்துவிட்டது. இருந்தாலும் மக்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கமல், சிம்பு போன்ற பெரிய நடிகர்கள் நடித்த 'தக் லப்' படத்தை விளம்பரப்படுத்தவே 25 நாட்கள் தேவைப்படுகிறது" என்று கூறினார்.