
சென்னை,
விஜய் சேதுபதி- ருக்மணி வசந்த் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் 'ஏஸ்'. இப்படம் எப்படி இருக்கிறது? என்பதை தற்போது காண்போம்.
பழைய வாழ்க்கையை மறந்து, புதிய வாழ்க்கையை வாழ மலேசியாவுக்கு வரும் விஜய் சேதுபதியை உறவினர் என்று நினைத்து அடைக்கலம் தருகிறார், யோகிபாபு.
எதிர்வீட்டில் வசிக்கும் ருக்மணி வசந்தை காதலிக்க தொடங்கும் விஜய் சேதுபதி, அவருக்கு விலையுயர்ந்த உடையை பரிசளிக்க கடன் வாங்க செல்கிறார். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரிய தொகைக்கு கடனாளியாக சிக்குகிறார்.
அதேவேளை யோகிபாபுவும், அவரது தோழி திவ்யாபிள்ளையும் கடனில் சிக்கி தவிக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகளை தீர்க்க வங்கியில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார், விஜய் சேதுபதி.
இந்த விஷயம் வில்லன்களான பி.எஸ்.அவினாஷ், பப்லு பிரித்விராஜுக்கு தெரிந்து முழு பணத்தையும் கறக்க முடிவு செய்தார்கள். இன்னொரு பக்கம் போலீசும் விசாரணையை முடுக்கி விடுகிறது.
விஜய் சேதுபதியை போலீசார் நெருங்கினார்களா? வில்லன்களிடம் இருந்து விஜய் சேதுபதி எப்படி தப்பித்தார்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? என்பதே மீதி கதை.
காதல், ஆக்சன், நகைச்சுவை என முப்பரிமாண நடிப்பை காட்டி கலக்கி இருக்கிறார், விஜய் சேதுபதி. கதைக்கு தேவையானதை கச்சிதமாக கொடுத்து, அலட்டல் இல்லாத நடிப்பால் அலங்கரிக்கிறார்.
எதார்த்த நடிப்பால் வசீகரிக்கிறார், ருக்மணி வசந்த். கொஞ்சல் நடிப்பில் அவரது கோபமும் ரசிக்க வைக்கிறது. விஜய் சேதுபதியை அவர் முதன்முதலில் கட்டிப்பிடிக்கும் காட்சி அழகு.
விஜய் சேதுபதியுடன் படம் முழுக்க பயணிக்கும் யோகிபாபு, தனது காமெடியால் கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இருவரும் வரும் காட்சிகளில் கலகலப்புக்கு 'கியாரண்டி'. வில்லன்களிடம் சிக்கி அவர் அடிவாங்கும் காட்சிகளில் வயிறு குலுங்குகிறது.
திவ்யாபிள்ளை அழகான அறிமுகம். பி.எஸ்.அவினாசும், பப்லு பிரித்விராஜும் வில்லத்தனத்தில் போட்டிபோட்டு மிரட்டியுள்ளனர். ராஜ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. சாம் சி.எஸ். இசை வருடுகிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைக்கதை பலம். நடுரோட்டில் வங்கி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற லாஜிக் மீறல் காட்சிகள் பலவீனம்.
பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கலகலப்பான கதைக்களத்தில் படத்தை இயக்கி கவனிக்க வைக்கிறார், ஆறுமுககுமார்.