ஏழைகளுக்கு எட்டாத கனி

1 day ago 3

பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி ஆபரணங்களை பொதுமக்கள் அணிந்து வருகின்றனர். தங்கமும், வெள்ளியும் ஒரு மதிப்புமிக்க உடைமைகளாக இருந்து வருகின்றன. ஆனாலும் வெள்ளியை காட்டிலும் மக்கள் தங்க ஆபரணங்களை அதிகம் விரும்புகின்றனர். வெள்ளியை காட்டிலும் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. தங்கத்தின் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது மதிப்பு மிக்க சொத்தாக மாறி விட்டது.

தங்கத்தை காட்டிலும் பல மடங்கு விலை குறைவு என்றாலும், சமீபகாலமாக வெள்ளியின் விலை உயர்வு விகிதம் தங்கத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்த 12 மாதங்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுமார் 37 சதவீதம் உயர்ந்தன. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் வெள்ளியின் விலை 8.80 சதவீதம் அதிகரித்தது. ஆனால் இதே காலத்தில் தங்கத்தின் விலை 6.70 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டது.

ஏழைகளின் தங்கம், புதிய தங்கம் என்று அழைக்கப்படும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியாகவும் உள்ளது. எதனால் வெள்ளி விலை உயருகிறது என்று பார்த்தால், தங்கத்தின் விலை உயர்வுக்கு எதெல்லாம் காரணமாக இருக்கிறதோ அதெல்லாம் வெள்ளி விலை உயர்வின் பின்னணியில் உள்ளது. இருப்பினும் வெள்ளிக்கு கூடுதலாக ஒரு காரணம் உள்ளது. மின்சார வாகனங்கள், சோலார் எனர்ஜி போன்ற புதிய தொழில்துறைகளில் வெள்ளிக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டில் வெள்ளியின் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ம் தேதி ஒரு கிராம் ரூ.7,940க்கு விற்பனையான 22 கேரட் தங்கம், மார்ச் 31ம் தேதி ரூ.8,425க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 22 கேரட் ரூ.4,267க்கு விற்பனை ஆன தங்கம் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆக உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டில் தான் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு ரூ.6394க்கு விற்பனை ஆன தங்கம் கிராமுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.8,425 ஆக நேற்று விற்பனையானது.

பலவீனமான பொருளாதாரம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் இந்திய ரூபாய் டாலருக்கு எதிராக பலவீனமடைந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவில் திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதால், விலையும் உயரக்கூடும்.
அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இவை தவிர, அமெரிக்க அதிபரின் பொருளாதாரக் கொள்கைகள், பங்குச் சந்தை சரிவு, ரியல் எஸ்டேட் சரிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்டவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதே தவிர, குறைவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. தங்கம் விலை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருவதைக் கண்டு, ஏழை பெண்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை எட்டிவிடும். செய்கூலி, சேதாரத்தை கூட்டினால் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் நகை, கடைகளில் வாங்கும்போது ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் என்பதால் ஏழை பெண்களுக்கு எட்டாத கனியாக தங்க நகைகள் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

The post ஏழைகளுக்கு எட்டாத கனி appeared first on Dinakaran.

Read Entire Article