
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ. ஆகும். இங்கு இயற்கைப் பூங்கா, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் கோவில், மங்கலம் தாமரைக்குளம், படகு குழாம் போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்.
எப்பொழுதும் ஒரே சீதோஷ்ண நிலை இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வருகை தருகின்றனர். கோடை காலங்களில் ஏலகிரி மலையில் கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு ஏலகிரி மலையில் கோடை விழா கொண்டாடப்படவில்லை.
இந்த நிலையில், ஏலகிரி மலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோடை விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து மேற்கொண்டுள்ளது. இந்த விழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் சுற்றுலா குறித்த கண்காட்சி, உள்ளூர் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இருப்பினும், 7 நாட்கள் நடத்தப்படும் கோடை விழா, மழை காரணமாக இன்று ஒருநாள் மட்டுமே நடத்தப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.