ஏற்காட்டில் பெற்றோர் கண்முன் சோகம்: ஓடை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

6 hours ago 2

சேலம்: ஏற்காட்டில் பெற்றோர் கண் முன் ஓடை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர். சேலம் மாவட்டம் ஏற்காடு கே.புத்தூர் மலைக்கிராமம் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (42), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (35). இவர்களுக்கு தீபக் (15), காமேஷ் (12) ஆகிய 2 மகன்கள். தீபக் 10ம் வகுப்பும், காமேஷ் 8ம் வகுப்பும் கொம்புதூக்கியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை நாள் என்பதால் இருவரும் தங்கள் வீட்டில் இருந்து வந்தனர்.

நேற்று பிற்பகல் வெங்கட்ராமன், கோவிந்தம்மாள், தீபக், காமேஷ் ஆகியோர் புளியங்காடு அருகில் உள்ள வாணியாறு நீரோடைக்கு குளிக்க சென்றார். அங்கு கணவனும், மனைவியும் துணிகளை துவைத்து கொண்டிருந்தனர். அப்போது தீபக்கும், காமேஷும் ஓடையில் இருந்து தண்ணீரை வெளியே இறைத்து விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் இருவரையும் காணவில்லை. துணிகளை துவைக்கும் வேலையில் இருந்த பெற்றோர் கவனிக்கவில்லை. திடீரென மகன்களை பார்த்தபோது காணவில்ைல. உடனே பதறியடித்து கொண்டு அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த 10 அடி தூரத்தில் வெங்கட்ராமன் தேடினார். அங்கு சற்று ஆழமான குழியில் தீபக், காமேஷ் ஆகிய இருவரும் மூழ்கி உயிரிழந்து கிடந்தனர்.

தண்ணீரை இறைத்து விளையாடிய அவர்கள், ஓடைக்குள் இறங்கியபோது, குழிக்குள் விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது. சிறுவர்கள் இருவரது சடலத்தையும் தந்தையே வெளியே தூக்கி வந்தார். கோவிந்தம்மாள் கதறியழுதார். தகவலறிந்து அவர்களது உறவினர்கள் மற்றும் மலை கிராம மக்களும் வந்து சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தனர். இதுபற்றி அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிக்க சென்ற இடத்தில் பெற்றோர் உடனிருந்த நிலையில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அம்மலைகிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீச்சல் பழகிய சிறுவன் சாவு;
சேலம் வீரபாண்டி அக்கரபாளையம் லட்சுமணூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் மகன் கிஷோர் (13). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம்வகுப்பு படித்து வந்தான். தற்போது விடுமுறை என்பதால் கிஷோருக்கு சதிஷ்குமார் நீச்சல் பழகி கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகி கொடுத்த நேரத்தில் சிறுவனின் இடுப்பு பகுதியில் கேன் கட்டிவிட்டிருந்தார். கிஷோரும் நீண்டநேரம் நீச்சலடித்ததால் அதிகமாக தண்ணீரும் குடித்துள்ளார். இதில் திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவனை சதீஷ்குமார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏற்காட்டில் பெற்றோர் கண்முன் சோகம்: ஓடை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article