ஏற்காட்டில் பணிக்கு சரியாக வராத ஆசிரியரை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

4 hours ago 2

*வகுப்புகளை புறக்கணித்தனர்

ஏற்காடு : ஏற்காடு அருகே, ஆசிரியர் சரிவர பணிக்கு வராததால், அரசு பள்ளியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள மாரமங்கலம் பஞ்சாயத்து சின்னமத்தூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர், நிரந்தர ஆசிரியர் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தலைமை ஆசிரியர் 2 பள்ளிகளை பார்ப்பதால், அவர் வாரத்தில் ஒருமுறை மட்டுமே பள்ளிக்கு வருகிறார். மேலும், ஆங்கில ஆசிரியர், பள்ளிக்கு சரிவர வருவதில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சுமார் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, கல்வி அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்தால் தான், கலைந்து செல்வோம் என்றனர். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கையை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

ஆனால், இதை பெற்றோர்கள் ஏற்க மறுத்து, தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வீடுகளுக்கு திரும்ப அழைத்து சென்று விட்டனர். இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காணாவிட்டால், தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறியதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஏற்காட்டில் பணிக்கு சரியாக வராத ஆசிரியரை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article