ஏறுமுகத்தில் தங்கம் விலை

3 hours ago 1

தங்கம் என்பது நமது கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்தது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் ஆகிவிட்டது. தங்கம் மதிப்புமிகு உலோகம் என்பதால் பிள்ளைகளை கொஞ்சும்போதும், ஏன் காதலர்கள் மனம் திறந்து பேசும்போதும்கூட தங்கமே, பொன்னே என்றுதான் கொஞ்சுவார்கள். அந்த அளவுக்கு தங்கத்தின் மீது பொதுமக்களுக்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் மட்டுமல்ல, சரித்திர காலம் தொட்டே தங்கத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது என்பது இலக்கியங்களில் மட்டுமல்ல அகழ்வாராய்ச்சிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திலும் தங்கத்தின் தாக்கம் அதிகம் உண்டு.

ஒரு நாட்டின் வளத்தை அந்த நாட்டில் தங்கம் கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்தே மதிப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் அதிக தங்கம் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதால் அது செல்வ செழிப்புள்ள நாடாக மதிப்பிடப்படுகிறது. உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பில் இருக்கும் நாடுகளில் 7-வது இடத்தில் நமது நாடு இருக்கிறது. இந்தியாவைவிட அமெரிக்காவில் 10 மடங்கு அதிகமாக தங்கம் கையிருப்பில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தங்கம் ஆபரணமாக மட்டுமல்லாமல், சேமிப்பாகவும், அவசர தேவைகளுக்கு கடன் வாங்க பயன்படும் பொருளாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு இது ஆபத்பாந்தவன்.

எப்படியென்றால் விவசாய குடும்பங்களில் தங்கள் சேமிப்பை நிலம் வாங்குவதற்கு இணையாக தங்கம் வாங்குவதிலும் செலவிடுகிறார்கள். விதைப்பு நேரத்தில் அதிக செலவாகும்போது தங்கள்வசம் இருக்கும் தங்கத்தை வங்கிகளில் அடமானம் வைத்து தங்கக்கடன் வாங்குகிறார்கள். அறுவடை முடிந்து கையில் பணம் வந்தவுடன் முதல் வேலையாக அடகுவைத்த தங்கத்தை மீட்டுவிடுகிறார்கள். இப்போதெல்லாம் தங்கம் ஆபரணத்துக்கு மட்டுமல்லாமல் அதிக வருவாயை ஈட்டித்தரும் சேமிப்பாகவும் உள்ளது. அமெரிக்காவில் கூட டாலருக்கு இணையாக மதிப்பிடும்போது தங்கத்தின் விலை 1971 முதல் ஆண்டுக்கு 8 சதவீதம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

உலக அளவில் ஆண்டுதோறும் தங்கத்தின் தேவை 3 ஆயிரம் டன்னாகும். இதில் 33 சதவீதம் மட்டுமே ஆபரணங்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. 7 சதவீதம் பல்வேறு தொழில்நுட்ப பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. 40 சதவீதம் முதலீடுகளாகிறது. 20 சதவீதம் ரிசர்வ் வங்கியால் வாங்கப்படுகிறது. முதலீடுகள் என்பது தங்க நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ, தங்க பத்திரங்களாகவோ செலவழிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் அந்தநாளில் தங்கம் என்ன விலையில் இருக்கிறதோ, அந்த விலையில் டிஜிட்டலாகவே வரவு வைத்துக்கொள்ளமுடிவதுதான் தங்க பத்திரம். இப்படி பல வழிகளிலும் தங்கம் மக்களை கவருவதால் தேவை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து, விலையும் ஏற்றத்தை கண்டுக்கொண்டு இருக்கிறது.

2020-ல் ஒரு பவுன் தங்கத்தின் விலை தமிழ்நாட்டில் ரூ.30 ஆயிரம் என்றிருந்தநிலை மாறி நேற்று ஒரு பவுன் ரூ.63 ஆயிரத்து 440 ஆக உயர்ந்து இருமடங்கையும் தாண்டிவிட்டது. வேறு எந்த சேமிப்பிலும் இவ்வளவு வருவாய் கிடைக்காது. இதன்படி ஆண்டுக்கு சராசரியாக 14.94 சதவீதம் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இதுபோல எந்த முதலீட்டிலும் இவ்வளவு லாபம் பார்க்கமுடியாது. தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் உலகளவில் பொருளாதார மந்தநிலை, நிதி நெருக்கடி ஏற்படும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் வாங்குகிறார்கள். மேலும் உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்துக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தமட்டில் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இந்த விலை ஏற்றம் இப்படியே நின்றுவிடப்போவதில்லை. இன்னும் வரும் நாட்களில் உயர்ந்துகொண்டே போகும் என்பது நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

Read Entire Article