சென்னை, மே 16: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும் போது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை, மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும் போது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 4 மணிக்கு மாத்தூர் பாலசுப்பரமணி நகர், சடையன்குப்பம், கானுநகர், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்வில் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பிலும் பங்கேற்பார்கள். மேலும், இந்த நிகழ்வு ஒரு ஒத்திகை மட்டுமே. இது தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஏதும் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம், என சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post ஏரிகளில் இருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படும் போது கரையோர மக்களை மீட்பது குறித்து 6 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை: மாநகராட்சி சார்பில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.