புதுடெல்லி: இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை நாட்கள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் வெயில் சதமடித்து வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிகமான வெயில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஆன்லைன் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும். இருப்பினும், தெற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை இருக்கலாம். வடமேற்கு மற்றும் வடகிழக்கில் உள்ள சில இடங்களைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் அங்கு வெயில் அதிகமாகவோ அல்லது வழக்கத்தை விட குறைவாகவோ இருக்கலாம்.
பொதுவாக, ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் பதிவாகும். இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பாலான பகுதிகள், மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு இந்தியாவின் சமவெளிகள் இயல்லை விட 2 முதல் 4 வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தான், குஜராத் அரியானா, பஞ்சாப், மபி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, சட்டீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளது.
இதே காலகட்டத்தில், கிழக்கு உபி, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசாவில் சில பகுதிகளில் 10 முதல் 11 வெப்ப அலை நாட்கள் இருக்கலாம். ஏப்ரலில் கோடை மழையின் நீண்டகால சராசரி 39.2 மிமீ. இதில் 88 முதல் 112 சதவீதம் வரையிலும் இயல்பான மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளது. வடமேற்கு, வடகிழக்கு, மேற்கு-மத்திய மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும். வடகிழக்கு மாநிலங்கள் ஏப்ரல் மாதத்தில் வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என்றார்.
* கடந்த ஆண்டு கோடையில் வழக்கத்தை விட கடுமையான வெயில் வாட்டியது. 2024ல் 536 வெப்ப அலைகள் பதிவாகின. இது 14 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம்.
* கடந்த ஆண்டை விட இம்முறை வெப்ப அலை முன்கூட்டியே வந்துள்ளது. 2024ல் நாட்டின் முதல் வெப்ப அலை ஏப்ரல் 5ம் தேதி ஒடிசாவில் பதிவானது. இம்முறை கொங்கன் மற்றும் கடலோர கர்நாடகாவின் சில பகுதிகளில் பிப்ரவரி 27-28ம் தேதிகளில் வெப்ப அலைகள் ஏற்பட்டன.
* வெயில் கொளுத்தும் என்பதால் கோடை காலத்தில் வழக்கத்தை விட 9 முதல் 10 சதவீதம் அதிக மின்சார தேவை இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
The post ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலும் கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும்: வெப்ப அலைகள் இரட்டிப்பாகும் appeared first on Dinakaran.