ஏனம்பாக்கம்-கல்பட்டு கிராமத்தில் ரூ75 லட்சம் மதிப்பிலான 15 ஏக்கர் அரசு நிலங்கள் மீட்பு: அதிகாரிகள் அதிரடி

2 weeks ago 2

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, சுமார் ரூ75 லட்சம் மதிப்பிலான 15 ஏக்கர் அரசு நிலங்கள் தனிநபர்களின் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்கப்பட்டன. பெரியபாளையம் அருகே, ஏனம்பாக்கம்-கல்பட்டு கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ஆற்றுக்கால்வாய் இடம் உள்ளது. இந்நிலையில், அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தை சில தனிநபர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தி, அதில் வீடுகள் கட்டி, நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான ஆற்றுக்கால்வாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் வீடு, நிலங்களை உடனடியாக அகற்றுமாறு, திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர், அப்போதைய ஊத்துக்கோட்டை தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

கலெக்டர் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையில், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டியிருந்த 12 வீடுகள் மற்றும் 14.59 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன. அப்போது மீட்கப்பட்ட, வீடுகள், நிலங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ5.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, மீதமுள்ள சுமார் 15 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களும் விரைவில் மீட்கப்படும் எனக்கூறினர். இந்நிலையில், விடுபட்ட சுமார் ரூ75 லட்சம் மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, அதில் பூச்செடிகள் நடப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 64 தனி நபர்களிடம் இருந்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

அதன்படி ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள் வளவன் ஆரோக்கியதாஸ் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வருவாய் ஆய்வாளர் கீதா, விஏஓ யுகேந்தர் மற்றும் பொதுப்பனித்துறை அதிகாரிகள் முன்னிலையில், நேற்று மீண்டும் பொக்லைன் இயந்திரம் மூலம் அரசுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன. ஏற்கனவே ரூ5.25 கோடி மதிப்பிலான 14.59 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதையடுத்து, நேற்று மீதமுள்ள ரூ75 லட்சம் மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் ஏனம்பாக்கம்-கல்பட்டு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஏனம்பாக்கம்-கல்பட்டு கிராமத்தில் ரூ75 லட்சம் மதிப்பிலான 15 ஏக்கர் அரசு நிலங்கள் மீட்பு: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article