சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக காவல்துறை ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அலுவலகத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த தீ விபத்தானது, தன்னை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று அவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக கல்பனா நாயக் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் பதவியேற்பதற்கு முந்தைய காலத்திலும், பதவி வகித்த காலத்திலும், காவல்துறை துணை ஆய்வாளர் நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
காவல்துறை பணியிடங்களை நியமனம் செய்வதில் ஏற்படுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர முற்படும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் தீ விபத்து முயற்சியோ என்ற அச்சம் எழுகிறது. இச்சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவருக்கும், தலைமைச் செயலருக்கும் விவரமாக புகார் கடிதம் அளிக்கப்பட்டும், இன்று வரை அதற்கான விசாரணை மேற்கொண்டிருப்பதாக தெரியவில்லை. மாறாக, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதோடு, துறை சார்ந்த பணிகளில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது.
தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள காவல்துறையினருக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையை பொறுப்பில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.