வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் டிரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும், பல்வேறு நாடுகள் மீதும் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், இதர பெட்ரோலிய பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதியும் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, 25 சதவீத இறக்குமதி விதிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி குலொயா ஷியின்பனு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தியின்போது மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை தடுக்கவும், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் இடம் குலொயா உறுதி அளித்தார். மேலும், உடனடியாக மெக்சிகோவின் வடக்கு எல்லையில் அமெரிக்காவை ஒட்டிய பகுதிகளில் 10 ஆயிரம் தேசிய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும் ஜனாதிபதி குலொயா உறுதி அளித்தார்.
இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை தடுத்து நிறுத்துவது, போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக டிரம்ப் இடம் மெக்சிகோ ஜனாதிபதி உத்தரவாதம் அளித்தார். இதனை தொடர்ந்து மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஒரு மாதம் அமலில் இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.