![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39100062-railway33.webp)
சென்னை,
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரெயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித் தடத்திலும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே ஏசி வசதி இல்லாத ரெயில் பெட்டிகள் ஆகும். இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்கேற்ப ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரெயில்களை இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை அடுத்து சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புறநகர் ஏசி மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், 1,116 பேர் அமர்ந்தும் 3,798 பேர் நின்று செல்லும் வகையில் ஏ.சி. வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரெயில் சேவை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் என்பதால், காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக அளவு இந்த மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.