சென்னை: செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் ஆபாச வீடியோவில் பெண்ணின் முகத்தை மாற்றியமைத்து, பெண்ணிற்கு அனுப்பி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், தான் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கி ஒரு சலூனில் வேலை செய்து வருவதாகவும், தான் வீட்டிற்கு செல்ல Uber Bike Ride Booking மூலம் புக் செய்தபோது, Uber இருசக்கர வாகன ஓட்டுநர் ஜோ ரிச்சர்ட் என்பவர் வந்ததாகவும், பின்னர் பல அழைப்புகளுக்கு அவரே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால், இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாகவும், பின்னர் தன்னிடம் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என ஜோ ரிச்சர்ட் கேட்டபோது தான் மறுத்ததாகவும்,
பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு ஒரு நபர் அனுப்பிய வீடியோவை பார்த்தபோது, அதில் தானும், ஜோ ரிச்சர்டும் உறவு கொள்வது போல போலியான ஆபாச வீடியோ அனுப்பியதாகவும், யாரோ நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆபாச வீடியோவில் தனது முகத்தையும், ஜோ ரிச்சர்டு முகத்தையும் இணைத்து அனுப்பி, தன்னை மிரட்டியதாகவும், மேற்படி பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார். சென்னை காவல் ஆணையாளர் இம்மனு மீது துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டதன்பேரில், மேற்கு மண்டல இணை ஆணையாளர் P.C.கல்யாண், வழிகாட்டுதலின்பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, ஜோ ரிச்சர்டு என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் எதிரி ஜோ ரிச்சர்ட் மேற்படி பெண்ணிடம் சுமார் 8 மாதங்களாக நண்பர்களாக பழகி பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும், மேற்படி பெண்ணிடம் உறவு வைத்து கொள்ள பலமுறை கேட்டபோது, அவர் மறுத்ததாகவும், அதனால் அவரை அடைய வேண்டும் என நினைத்து, செயற்கை நுண்ணறிவு செயலி (Artificial Intelligence) மூலம், ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதில் மேற்படி பெண்ணின் முகத்தையும், தனது முகத்தையும் மாற்றியமைத்து, போலி ஆபாச வீடியோவாக உருவாக்கி, தனது போலி இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து மேற்படி பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்பி வைத்து, வேறொரு நபர் செல்போனில் மிரட்டுவது போல மிரட்டி மேற்படி பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள முயன்றதாகவும், ஜோ ரிச்சர்ட் தெரிவித்தார்.
அதன்பேரில், எதிரி ஜோ ரிச்சர்ட், வ/28, த/பெ.ஜோசப், சாலைமா நகர் 2வது தெரு, வியாசர்பாடி, சென்னை என்பவரை நேற்று (22.05.2025) கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் மற்றும் 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி ஜோ ரிச்சர்ட் விசாரணைக்குப் பின்னர் நேற்று (22.05.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ஏஐ மூலம் ஆபாச வீடியோவில் பெண்ணின் முகத்தை மாற்றியமைத்து மிரட்டிய நபர் கைது: செல்போன், லேப்டாப் பறிமுதல் appeared first on Dinakaran.