எஸ்பிஐ வங்கியின் சர்வர் முடங்கியது; 2 நாளாக வாகனப்பதிவு செய்வதில் சிக்கல்: ஆர்டிஓ அலுவலக சேவை முடக்கத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு

3 months ago 11

சென்னை: எஸ்பிஐ வங்கியின் சர்வர் முடக்கத்தால் கடந்த இரு நாட்களாக நாடு முழுவதும் வாகனப்பதிவு நடைபெறுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. ஒரு வங்கிக்கு மட்டும் அதிகாரம் அளித்ததால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் ஆர்டிஓ அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே, காலை முதல் மாலை வரை மக்கள் தலைகளால் ஆர்டிஓ அலுவலகங்கள் எப்போதும் நிரம்பியே இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்காக www.parivahan.gov.in என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், கையொப்பம் மாற்றம், நடத்துநர் உரிமம், வாகனப் பதிவு, சர்வதேச ஓட்டுநர் உரிமம் உள்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், ஆன்லைன் மூலம் பணம் கட்டுவதில் வங்கி செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளால், அதாவது அடிக்கடி ஏற்படும் சர்வர் டவுனால் வாகன பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு பணம் கட்ட முடியாமல் மக்கள் பல நேரங்களில் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு வங்கி நிர்வாகமோ, ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகமோ தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக பல்வேறு நேரங்களில் புகார்கள் எழுந்து வருகிறது. நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் சர்வர் பிரச்னையால் வாகனப்பதிவு நடைபெறாத நிலை உருவாகிள்ளது. இந்த பிரச்னை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நீடிப்பதால் வாகன பதிவு உள்ளிட்ட ஆர்டிஓ அலுவலக செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி கிடக்கிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்தியா முழுவதும் வாகன பதிவு, லைசென்ஸ் உள்ளிட்ட ஆர்டிஓ அலுவலக செயல்பாடுகளுக்கு ஒரே வெப்சைட்டை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பரிவாஹன் வெப்சைட்டை பயன்படுத்தியே அதற்கான கட்டணங்களை ஆன்லைன் மூலம் கட்ட முடியும். இந்த பரிவாஹன் வெப்சைட் மூலம் பணம் கட்ட வேண்டுமானால் எஸ்பிஐ வங்கி மூலம் மட்டுமே பணம் செலுத்தும் வகையில் லிங்க் கொடுத்துள்ளனர்.

புதிய வாகனங்களை வாங்கியவர்கள் அந்த வாகனங்களை பதிவு செய்வதற்காக பணம் கட்ட முயன்ற போது முடியாமல் போனது. அதற்கு காரணம், குறிப்பிட்ட எஸ்பிஐ வங்கி செயல்பாட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் டவுன் என்றே தொடர்ந்து வருகிறது. இதனால் கட்டணம் செலுத்த முடியாமல் பலர் கார் உள்ளிட்ட வாகனங்களை டெலிவரி எடுக்க முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். ஷோரூம்கள் காரை டெலிவரி எடுத்து தனிப்பட்ட முறையில் வாகனங்களை பதிவு செய்ய முயன்றவர்களும் இந்த லிங்கை பயன்படுத்தி பணம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஷோரூம்கள் மூலம் பதிவு செய்து டெலிவரி எடுக்க முயன்றவர்களும் வங்கியின் சர்வர் டவுன் பிரச்னையால் கார்களை டெலிவரி எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பலர் நல்ல நாள், நல்ல நேரத்தில் கார் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வங்கியின் சர்வர் டவுன் பிரச்னையானது பிபியை எகிற செய்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட எத்தனையோ வங்கிகள் இருக்கும் போது, எஸ்பிஐ வங்கியை மட்டும் இந்த சேவைக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏற்கனவே ஒன்றிய பாஜ அரசு மீதான தேர்தல் பத்திர முறைகேடு எஸ்பிஐ வங்கி மூலமே நடந்த போது, உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்திலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எத்தனையோ இருக்கும் நிலையில், எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது முறைகேட்டுக்கு உடந்தையாக உள்ளதா என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பரிவாஹன் வெப்சைட் லிங்கில் உள்ள எஸ்பிஐ வங்கியின் சர்வர் டவுன் பிரச்னையால் கடந்த இரண்டு நாட்களாக ஆர்டிஓ அலுவலகம் தொடர்பான வாகன பதிவு, லைசென்ஸ், ஆர்சி புக் என அனைத்து வகையான சேவைகளும் பணம் கட்ட முடியாமல் முடங்கி நிற்பது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கிட்டதட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில். இதுபோன்று சர்வர் டவுன் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படுகிறது. முக்கிய துறையான ஆர்டிஓ அலுவலக செயல்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக முடங்கி கிடக்கும் நிலையில், எஸ்பிஐ வங்கியோ, ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகமோ எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

The post எஸ்பிஐ வங்கியின் சர்வர் முடங்கியது; 2 நாளாக வாகனப்பதிவு செய்வதில் சிக்கல்: ஆர்டிஓ அலுவலக சேவை முடக்கத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article