
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினார்கள்.
தேர்வு முடிவுகள் மே 19-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக கடந்த 16-ந் தேதியே வெளியிடப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, தேர்வு எழுதியவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகல் மதிப்பெண் சான்றிதழ் அவர்கள் படித்த பள்ளியிலேயே இன்று வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது நகல் மதிப்பெண் சான்றிதழை வாங்கிச் சென்றனர். இதைத்கொண்டு அவர்கள் மேல்நிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக பள்ளிக் கல்வித்துறை இந்த ஏற்பாட்டினை செய்திருந்தது.