சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “சென்னையில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சி அரங்குகளை உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த வளாகம் ரூ.227 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 4.54 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களுடன் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் 227 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இக்கட்டிடத்தின் அடித்தளம் 1 மற்றும் 2-இல் 323 கார்கள் நிறுத்தும் வசதியும், கோ-ஆப்டெக்ஸ் காட்சியறையும், தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 கடைகளும், மூன்றாம் தளம் முதல் ஐந்தாம் தளம் வரை 36 இதர மாநில கடைகளும், 6 மற்றும் 7ம் தளங்களில் புத்தாக்க மையம் மற்றும் வடிவமைப்பு அச்சுக்கூடமும், 8ம் தளத்தில் கோ-ஆப்டெக்ஸ் அலுவலகமும் அமைக்கப்படவுள்ளது. மேலும், இவ்வளாகத்தில் உணவுக்கூடம், 4 மின்தூக்கிகள் மற்றும் 2 தானியங்கி படிக்கட்டுகள், கழிப்பறைகள், தீயணைப்பு வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளன.
மீள்வளத்துறை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 58 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மீன் விதைப் பண்ணைகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் என 10 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் பால்வளத்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம், சூலக்கரை கிராமத்தில் 15 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை தீவன தொழிற்சாலை ஆகியவற்றை திறந்து வைத்தும், திருநெல்வேலி மாவட்டம், கூடுதாழை கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
வருவாய் துறை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் 8 கோடியே 58 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 7 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 25 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
வீட்டுவசதி துறை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 327 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 2404 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
The post எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் ரூ.227 கோடியில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வளாகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.