நாட்டில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., மட்டுமல்லாமல் இந்திய அரசையே எதிர்த்து போராடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராகுல் காந்தி பேச்சு குறித்து மத்திய மந்திரியும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்கு வரலாறு ஏதும் தெரியாது. எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும், அதனை எங்கு வேண்டுமானாலும் ராகுல் காந்தி பேசி வருகிறார் என்பதை நான் பலமுறை சொல்லியுள்ளேன்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ-வை ரத்து செய்தது. முன்பு ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பின் படி பதவி பிரமாணங்கள் செய்யப்பட்டன. தற்போது, முதல்முறையாக இந்திய அரசியலமைப்பின்படி பதவி பிரமாணங்கள் நடக்கின்றன. அதேபோல, எஸ்.சி,எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது, என்று பேசினார்.