இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விவசாய விளைபொருட்கள் உலகின் மிகுதியான நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. அவற்றில் எள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இத்தகைய எள் பயிரை விவசாயிகள் பயிரிட்டு ஏற்றுமதி செய்யலாம் என்கிறார்கள் திருநெல்வேலி மாவட்ட விதை பரிசோதனை ஆய்வகத்தின் வேளாண்மை அலுவலர் ம.மகேஸ்வரன், ஞா.ஆனந்தி ராதிகா விதை பரிசோதனை அலுவலர் ஞா.ஆனந்தி ராதிகா ஆகியோர். எள் பயிரிடும் முறை குறித்தும்,அதை ஏற்றுமதி செய்யும் முறை குறித்தும் மேலும் விளக்கமாக கூறுகிறார்கள்.“எள் பயிரிட இந்தப் பருவம் மிகவும் ஏற்ற பருவம். மார்கழி மாதத்தில் மழை நின்ற பின் ஏக்கருக்கு 5 டன் அளவில் மக்கிய சாண உரமிட்டு ஐந்து முறை நன்றாக புழுதிபட உழுது விட வேண்டும். கடைசி உழவிற்கு முன் 800 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ மக்கிய எரு, 10 கிலோ மணல் சேர்த்து கலந்து வயல் முழுவதும் தூவ வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 68 மில்லி என்ற அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட விதை அமிர்தத்தைக் கலந்து, பின்னர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் கலக்க வேண்டும். அதனுடன் 240 கிராம் அளவில் அசோஸ்பைரில்லம் மற்றும் 240 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களைக் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்த வேண்டும். பின் விதையுடன் தேவையான அளவிற்கு மணல் கலந்து ஒரே சீராக விதைக்க வேண்டும்.
விதைத்த 15 மற்றும் 30வது நாளில் நெருக்கமாக முளைத்திருக்கும் எள் செடிகளை செடிக்குச்செடி 10 செ.மீ, வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 25வது நாளில் பூ பூக்கும் முன்னும், 35-45வது நாளில் நன்கு பூ பூத்த பின்னும், காய் காய்க்கும் தருணத்தில் இரண்டு முறையும் பாசனம் செய்ய வேண்டும். 65வது நாளுக்குப் பின் பாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் காய்கள் நன்றாக பிடிக்கும்.எள் செடியின் கடைசி காய் பழுப்பு நிறமாக மாறுவதற்குள், செடியின் கீழ் பகுதியில் இருந்து மத்திய பகுதியில் உள்ள காய்கள் மஞ்சளாக மாறியவுடன், செடிகளை வெட்டியோ, பிடுங்கியோ எடுத்து சிறுசிறு கட்டுகளாகக் கட்டி தலைகுப்புற வைத்து 3-5 நாட்கள் வைக்கோல் கொண்டு மூடிவிட வேண்டும். 5வது நாள் லேசாக உதறினால் விதைகள் காய்ந்த காய்களில் இருந்து வெளிவந்துவிடும். வெளிவந்த விதைகளை 2-3 நாட்கள் வெயிலில் உலர்த்தி சாக்குப்பைகளில் அடைத்து வைத்துக்கொள்ளலாம்.எள் சாகுபடி செய்யும் விவசாயப் பெருமக்கள் எள் எண்ணெய் வித்துக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறலாம். அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைகளையும், வழிமுறைகளையும் தெரிந்துகொண்டு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.
இந்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய எண்ணெய் வித்துக்கள் மற்றும் விளைபொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் மூலம் உருவாக்கப்பட்ட விதிகளின் படி எள் உற்பத்தி செய்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட எள் ஏற்றுமதிக்கு உகந்தது என சான்றிதழும், எள் வித்துக்களுக்குரிய நலச்சான்றிதழும் பெற்ற பின்னர்தான் ஏற்றுமதி செய்யமுடியும்.சமீபத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எள் ஏற்றுமதி செய்தபோது சரக்குக் கப்பலில் இருந்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் துறை மூலம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததில் எள்ளில் பூச்சிக்கொல்லி மருந்தின் எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சரக்கை கப்பலில் இருந்து இறக்காமல் நிறுத்தப்பட்டது. எனவே விவசாயிகள் எள் பயிரைத் தாக்கும் பூச்சி, நோய்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் எச்சம் அதன் விளைபொருளான எள்ளில் இல்லாதவாறு கவனமாக சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். ஆனாலும் எள் பயிர் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பூச்சி மற்றும் பூசணக்கொல்லிகளின் அதிகபட்ச எச்ச அளவு விளைவித்த எள்ளில் கீழ்க்கண்டவாறு இருக்கலாம் என அனுமதிக்கப் படுகிறது.
குளோர்பைரிபாஸ், டெபுகோனாசோல், தையமெத்தோக்ஸம், கார்பன்டாசிம், பினோமில், மாலத்தியான், எத்தியான், பென்வலரேட், அசிபேட், அசிடாமிபிரிட், புரோபனாபாஸ், ஃபென்புரோபாத்திரின், கார்பாக்ஸின், இமிடாகுளோபிரிட், டைமெத்தேயட், பிரிமிபாஸ், மீத்தைல் போன்ற பூச்சி மற்றும் பூசணக்கொல்லிகளின் அதிகபட்ச எச்ச அளவு 0.01 பிபிஎம் என்ற அளவிற்குள்ளும், மெட்டாலாக்ஸைல் மற்றும் மெட்டாலாக்ஸைல்-எம் 0.05 பிபிஎம் என்ற அளவிற்குள்ளும் டைக்குளோர்வாஸ் 2 பிபிஎம் என்ற அளவிற்குள்ளும், விளைந்த எள் வித்தில் இருக்கலாம் என அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஏற்று மதி செய்யும் எள் வித்தின் எள்வித்து மாதிரியை எடுத்து சோதனை மற்றும் அளவுதிருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லி எச்சம் ஆய்வு செய்யும் பரிசோதனைக்கூடத்தில் ஆய்வு செய்து ஆய்வு முடிவு அறிக்கை பெறுவது அவசியம்.
The post எள் பயிரும்… ஏற்றுமதி வாய்ப்பும்! appeared first on Dinakaran.