பொருளாதார தடை நீக்கம் அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் - சிரியா மக்கள் கொண்டாட்டம்

4 hours ago 2

ரியாத்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். முதலில், சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு நேற்று முன்தினம் சென்றார். ரியாத் நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள், ரியாத்துக்கு வந்திருந்தனர்.

அவர்களில், சிரியா நாட்டின் புதிய இடைக்கால அதிபர் அகமது அல்-ஷாராவும் ஒருவர். சிரியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த பஷார் ஆசாத் குடும்பத்துக்கு எதிராக போராடிய கிளர்ச்சி குழுவின் தலைவராக அகமது அல்-ஷாரா இருந்தார். அவரை அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக சிறை வைத்திருந்தது.

கடந்த டிசம்பர் மாதம், தலைநகர் டமாஸ்கஸ் நகரை அகமது அல்-ஷாராவின் கிளர்ச்சி குழு கைப்பற்றியது. அதையடுத்து, அவர் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். அதிபராக பஷார் ஆசாத் இருந்தபோது, சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. சவுதி அரேபியா பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, அந்த பொருளாதார தடைகளை நீக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்தார்.

ரியாத் நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்துக்கு முன்பு, அகமது அல்-ஷாராவை டிரம்ப் சந்தித்தார். மூடப்பட்ட அறைக்குள் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை. டிரம்ப்-இளவரசர் சல்மான்-அகமது அல்-ஷாரா ஆகியோர் இடையிலான சந்திப்பில், துருக்கி அதிபர் எர்டோகன், தொலைபேசி அழைப்பு மூலம் கலந்து கொண்டார்.

பின்னர், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ''சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த தடை, சிரியாவை முடக்குவதாக இருந்தது. தடையை நீக்குவது சிரியாவுக்கு புதிய தொடக்கமாக அமையும். சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்தான் இந்த முடிவு எடுக்க காரணம்'' என்று கூறினார். பொருளாதார தடை நீக்கம் குறித்த டிரம்ப் அறிவிப்பை சிரியாவில் அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Read Entire Article