பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகள் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு எல்லையில் கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. ரஜோரியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கி குண்டுகளை ஏவி நடத்திய தாக்குதலில் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபா பரிதாபமாக உயிரிழந்தார். இவரது வீட்டின் மீது பீரங்கி குண்டுகள் துளைத்ததில் மேலும் 2 அரசு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.
அதிகாரி தாபாவின் மறைவுக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இதே போல, ரஜோரியின் தொழிற்பேட்டை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் 2 வயது பெண் குழந்தை ஆயிஷா நூர் உட்பட 2 பேர் பலியாகினர். உரி பூஞ்ச், ஆர்எஸ் புரா உள்ளிட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பல கிராமப் பகுதிகளிலும் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியது. பூஞ்ச்சின் கிருஷ்ணா காட்டி செக்டாரில் ராணுவ நிலை மீது பாகிஸ்தான் ஏவிய பீரங்கி குண்டுவீச்சில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபேதார் மேஜர் பவன் குமார் பலியானார். நேற்றைய தாக்குதலில் 6 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 4 நாட்களில் அரசு அதிகாரி தாபா உட்பட 21 அப்பாவி பொதுமக்கள் பாகிஸ்தானின் துப்பாக்கி சண்டையில் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திற்கு எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பிஎஸ்எப் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நேற்றைய துப்பாக்கி சண்டையில் ஆர்எஸ் புரா பகுதியில் சர்வதேச எல்லையில் 8 பிஎஸ்எப் வீரர்கள் காயமடைந்தனர்.
* ரூ.10 லட்சம் நிவாரணம்
பாகிஸ்தானின் துப்பாக்கி சூட்டில் பலியானனோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று அறிவித்துள்ளார். அவர் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலில் பலியான அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் நாங்கள் நிற்கிறோம்’’ என்றார்.
* பாகிஸ்தானும், 4 பொய்களும்… ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய இந்தியா
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகங்களில் இருந்து தவறான தகவல்கள் வெளியிட்டதை கமாண்டர் ரகு ஆர். நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினர்.
அதன் விவரம்:
1. எஸ்-400,பிரம்மோஸ் ஏவுகணை தளம் சேதம்: பாகிஸ்தான் தனது ஜேஎப்-17 போர் விமானங்கள் மூலம் இந்தியாவின் மேம்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தளத்தை சேதப்படுத்தியதாக கூறியது. இது முற்றிலும் தவறு.
2. இந்திய விமானப்படை தளங்கள் சேதம்: பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவில் உள்ள சிர்சா, ஜம்மு, பதான்கோட், பதிண்டா, நலியா மற்றும் பூஜ் ஆகிய இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்கள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்த விமானப்படைத் தளங்கள் அனைத்தும் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. அத்தகைய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பான படங்களையும் வெளியிட்டது.
3. 3 வெடிமருந்து கிடங்குகள் மீது தாக்குதல்: பாகிஸ்தானின் தவறான தகவல் பிரச்சாரத்தின்படி, சண்டிகர் மற்றும் பியாஸில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் சேதமடைந்தன என்று கூறப்பட்டது. இது முற்றிலும் தவறானது என்று விளக்கப்பட்டது.
4. மதத் தலங்கள் மீதான தாக்குதல்:
பாக். மீது தாக்குதல் நடவடிக்கை எடுத்த போது இந்திய ராணுவம் மசூதிகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்தக் கூற்றை நிராகரித்த இந்தியா, பயங்கரவாத முகாம்கள் மட்டுமே எங்கள் இலக்கு. எந்த மதத் தலங்களையும் இந்திய ஆயுதப் படைகள் குறிவைக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.
* இந்தியா முன்பு நமத்துப்போன பட்டாசான துருக்கி டிரோன்கள்
துருக்கி நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான ராபிட் டெக்னாலஜி நீண்ட தூர பறக்கும் திறனுடைய அஸாப் என்ற புதிய பல்நோக்கு காமிகேஸ் டிரோனை உருவாக்கியுள்ளது. இந்த டிரோனை பயன்படுத்தித்தான் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. இதனால் நமத்துப்போன பட்டாசாக மாறியுள்ளது இந்த துருக்கி டிரோன்கள். அதன் விவரம்
* இறக்கைகள் 2 மீ
* அதிகபட்ச எடை 55 கிலோ
* பயனுள்ள எடை திறன் 15 கிலோ
* நீளம் 1.5 மீ.
* வானில் பறக்கும் தூரம் 500 கிமீ
* பறக்கும் உயரம் 300 மீ – 3000 மீ
* 3-8-16 யூனிட் லாஞ்சர் அமைப்பு
* ஒற்றை ஆபரேட்டர் கட்டுப்பாடு
* கூட்டாக பறக்கும்
* முழு மற்றும் பகுதி தானியங்கி விமான அமைப்பு
* ராணுவ, இதர வாகனங்களில் இருந்து ஏவமுடியும்
* பகல் அல்லது இரவு நேர இயக்கம்
தொழில்நுட்ப விவரங்கள்
* தொடர்பு வரம்பு 200 கிமீ
* பறக்கும் வேகம் மணிக்கு 270 கிமீ
* கடல் மைலுக்கு சமமான வேகத்தின் அலகு 70 நாட் – 145 நாட்
* வானில் சுற்றும் நேரம் 8 மணி நேரம்
* இயக்கம் – அதிகபட்ச உயரம் 9800 அடி
The post எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; மூத்த அரசு அதிகாரி, 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி; பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.